×

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமானதாக போலீசார் தேடி வந்த நிலையில், அவர் வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் எஸ்பிக்கு மரண வாக்குமூலம் என எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). இவர் கட்டுமானம், கான்ட்ராக்ட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது வீட்டார் பல இடங்களில் தேடியும் ஜெயக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகன் கருத்தையா ஜேப்ரின் உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஜெயக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து நெல்லை சரக டிஐஜி பொறுப்பை கவனித்து வரும் நெல்லை மாநகர கமிஷனர் மூர்த்தி, மாவட்ட எஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பி யோகேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஷியாம்சுந்தர், ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் உதவி இயக்குநர் ஆனந்தி மற்றும் தடய அறிவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. ஜெயக்குமாரின் கருகிய உடல் கிடந்த இடத்திற்கு அருகே தீப்பெட்டிகள், பிளேடுகள், ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவை கிடந்துள்ளன. அவற்றை போலீசார் மீட்டுள்ளனர். எனவே ஜெயக்குமார் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தகவல் அறிந்து அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், காங்கிரசார் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மாலையில் ஜெயக்குமார் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரு டாக்டர்கள் குழுவினர், பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.

இதனிடையே, ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனுக்கு தனது மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்கள் பலர் தனது வீட்டைச் சுற்றி வருவதால், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நில விவகாரத்தில் எனக்கு ஒருவரால் மிரட்டல் இருந்தது.

என்னிடம் கடனாக பெற்ற பணத்திற்கு நிலத்தை எழுதி கொடுத்து விட்டு, தற்போது நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் வட்டியோடு செலுத்திய பணத்திற்கு, எனது காசோலையை பயன்படுத்திக் கொண்டு வழக்கு தொடர்வேன், கொலை செய்வேன் என நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரி ஒருவர் மிரட்டி வருகிறார்.

அவராலும் உயிருக்கு ஆபத்து உள்ளது. மேலும் பள்ளி கட்டிடம் கட்டிய வகையில் ரூ.30 லட்சம் பாக்கியை தர விடாமல் மிரட்டி தடுத்து வருகின்றனர். தேர்தல் பணிக்கு செலவு செய்தது தொடர்பாகவும் கொலை மிரட்டல் வருகிறது. ஒப்பந்த முறையில் அமைத்திருந்த எனக்கு சொந்தமான தார் பிளாண்டை கழற்றி விட்டு விட்டனர். இந்த பணத்தை கேட்டதற்கும் மிரட்டல் வருகிறது. தேர்தல் சமயத்தில் பல்வேறு தெரியாத நபர்களிடம் இருந்தும் மிரட்டல் வந்தது.

பள்ளித் தாளாளர், கிரஷர் உரிமையாளர், அரசியல் பிரமுகர்கள், ஒரு பெண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரால் எனக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் மூலம் ஜெயக்குமார் மரணத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரத்தில் 2ம் தேதியில் இருந்து அவர் காணாமல் போனதால், கடத்திச் சென்று பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

இந்த கொலை குறித்து விசாரிக்க 7 தனிப்படைகளை அமைத்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 29ம் தேதியில் இருந்து வந்த கால்கள், 2ம் தேதிக்கு பிறகு அந்த செல்போன் எண் சென்ற பகுதிகள் என ஆய்வில் இறங்கியுள்ளனர்.

* உடலை கட்டி தீ வைப்பு?
சம்பவ இடத்தில் ஜெயக்குமாரின் உடல் ஒரு பலகையில் குப்புற படுக்க வைக்கப்பட்டு வயரால் உடம்பு முழுவதும் கட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரே உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுடன் எரிந்த நிலையில் வயர் கம்பிகள், மரப்பலகை துண்டுகள் காணப்பட்டன. இவற்றை தடயவியல் வல்லுநர்கள் கைப்பற்றியுள்ளனர்.

* முன்னுக்குப் பின் முரணான தகவல்
ஜெயக்குமார் கடந்த 30ம் தேதியே தனது மரணம் குறித்த புகாரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அவர் கொலை நடந்திருக்காது, மீட்கப்பட்டிருக்க கூடும் என கூறுகின்றனர். ஆனால் 3ம் தேதி மாலைதான் அந்த புகார் கடிதம் ஜெயக்குமாரின் அலுவலகத்தில் இருந்து உதவியாளர்கள் மூலம் பெறப்பட்டது என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

* காங்கிரசார் திடீர் மறியல்
ஜெயக்குமார் கொலைக்கான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் காங்கிரசார் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Nellie District Congress ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar Thanasingh ,SP ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...